அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, நேற்று முன்தினம் (நவம்பர் 9) அந்த பதவிக்கு தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் கிறிஸ் மில்லர் புதிதாக நியமனம் செய்யப்பட்டதாக பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் அறிவித்திருந்தது.
இந்த புதிய பொறுப்பை கிறிஸ் மில்லர் ஏற்றுக்கொண்ட நிலையில், தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஊழியர்களில் ஒருவராக இருக்கும் காஷ் பட்டேல், செயலர் கிறிஸ் மில்லரின் தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இந்த பதவியிலிருந்த ஜென் ஸ்டீவர்ட் ராஜினாமா செய்ததையடுத்து காஷ் பட்டேலுக்கு இன்று (நவம்பர் 11) பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
காஷ் பட்டேல் என்று அறியப்படும் காஷ்யப் பிரமோத் பட்டேல் அமெரிக்காவின் நிரந்தர தேர்வுக் குழுவில் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் மூத்த ஆலோசகராகவும், வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்குநரகத்தின் மூத்த இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பிறந்து, வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த பட்டேல் கல்லூரிப் படிப்பை வர்ஜீனியா, புளோரிடா ஆகியவற்றில் மேற்கொண்டார். அத்துடன், சட்டத்துறையில் தேர்ந்து விளங்கிய பட்டேல் பயங்கரவாத எதிர்ப்பு வழக்குரைஞராக பணியாற்றிவந்தார். நீதித் துறையால் பணிபுரிந்தபோது, அவர் பாதுகாப்புத் துறையில் சிறப்பு நடவடிக்கை கட்டளையில் கீழ் சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிழக்கு ஆபிரிக்கா, உகாண்டா கென்யா என பல்வேறு நாடுகளில் வழக்காடுநராக பணிபுரிந்துள்ளார். காஷ் பட்டேலின் முன்னோர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.