ஐ.நா பாதுகாப்புக்குழுவில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தம் குறித்த விவாதம் இன்று (நவம்பர் 18) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி தூதர் முனீர் அக்ரம், "தெற்காசிய நாடான இந்தியா தனது சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறத்தாழ 20 போர்களை நடத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்தது.
இந்திய அரசு, பாகிஸ்தானில் அமைதியை குலைக்க பயங்கரவாதத்திற்கு வழங்கிவரும் ஆதரவுத் தருகிறது. அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவருகிறது. நாள்தோறும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பீரங்கி மற்றும் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்கிறது. அதனை நிறுவ எங்களிடம் ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் நடந்துவரும் அப்பட்டமான காட்டாட்சி, வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு இந்திய அரசே முழுமுதற்காரணம். காஷ்மீர் மக்களின் நியாயமான சுதந்திர போராட்டத்தை நசுக்க இந்தியா 9 லட்சம் படை வீரர்களை அங்கே நிறுத்தியுள்ளது. அதன் மூலம் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்து வருகிறது.
அத்தகைய இந்திய அரசை ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் சேர கூடாது. அதற்குரிய தகுதியை இந்தியா பெறவில்லை. எனவே, இந்திய அரசை பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராகவோ அல்லது நிரந்தரமற்ற தற்காலிக உறுப்பினராகவோ ஒருபோதும் இணைக்கக் கூடாது.
சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிலையான நீடித்த அமைதி தோன்ற ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் ஒரு சுதந்திரமான விசாரணையும், காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்திட பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்" என அவர் கூறினார்.