கடந்த நான்கு மாதங்களாக கரோனா வைரஸ் தொற்று நோயின் கோரப்பிடியில் உலக நாடுகள் சிக்கித் தவித்து வருகின்றன. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் புதிதாக 96,437 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,84,802ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று 4,352 பேர் உயிரிழந்ததன்மூலம், இத்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,52,225ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்ட 24,30,593 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் ஒரு லட்சம் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தை எட்டியுள்ளது.
அந்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 767 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், அந்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,00,572ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் கரோனாவால் 17,25,275 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,69,049 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக நியூயார்க்கில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் 372,494 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,310 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், ரஷ்யா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பிரேசிலில் 3,94,507 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24,593 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ரஷ்யாவில் 3,62,342 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,802 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,50,793 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,344 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ட்விட்டர்