உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிரம் காட்டிவருகின்றன. இருப்பினும், வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 86 ஆயிரத்து 881 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால்,கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 29 ஆயிரத்து 235ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்து 165ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று 56 ஆயிரத்து 552 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 58 ஆயிரத்து 995ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கொண்ட, சீனாவில் நேற்று புதிதாக மூன்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்நாட்டில் 82 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 78 ஆயிரத்து 195 பேர் குணமடைந்த நிலையில், 4 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், தற்போது 101 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருப்பினும், கரோனா அறிகுறியுடன் சந்தேகிகப்பட்ட 716 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 14 லட்சத்து 30 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 85 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்த நிலையில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்த வரையில் 78 ஆயிரத்து 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்து 549 பேர் உயிரிழந்துள்ளனர். 26 ஆயிரத்து 235 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு