சீனாவின் வூஹான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், 190க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவி, பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உலகளவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்திருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செவ்வாய்க்கிழமை நிலவரப்படி உலகளவில் இதுவரை 70 லட்சத்து 97 ஆயிரத்து 717 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 லட்சத்து 6 ஆயிரத்து 402 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 19 லட்சத்து 60 ஆயிரத்து 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்திலுள்ள பிரேசிலில் 7 லட்சத்து 70 ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.