வாஷிங்டன்:நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து பரப்பப்படும் கருத்துகளையும், தவறான தகவல்களை பரப்புவோரை கட்டுப்படுத்தவும் பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டரின் தலைமை நிர்வாக அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இதில் குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் இவை அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல என அந்த ட்வீட்டை நீக்கிவிட்டது.
இழுபறியாக இருந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட பின்னரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் இந்த அறிவிப்பினை கண்டித்து, தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என பலமுறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவந்தார்.