இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜெரால்டு குஷ்னர் என குடும்பத்தினருடன் நாளை இந்தியா வருகிறார்.
இதற்காக, அந்நாட்டின் மெரிலேண்ட் விமானத் தளத்திலிருந்து, இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு புறப்படுகிறார்கள்.
இதையடுத்து, ஜெர்மனியில் உள்ள ரைன்லேண்ட் - பாலாடினேட் மாகாணத்தில் இறங்கும் அவர்கள், அங்கிருந்து இந்திய நேரப்படி நாளை காலை 4:30 மணிக்குப் புறப்பட்டு நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சென்றடைவார். ட்ரம்ப்புடன், அமெரிக்க உயர் அலுவலர்கள் பலரும் உடன் வருகின்றனர்.
அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து பிரமாண்டப் பேரணியில் கலந்துகொள்ளும் ட்ரம்ப், அங்கு கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான 'மோத்திரா' மைதானத்தை திறந்து வைத்து, மக்களிடையே உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், மாலையில் குடும்பத்தோடு ட்ரம்ப், உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்குச் செல்வார்.
ட்ரம்ப்பின் பயணம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அமைச்சக அலுவலர் ஒருவர், "அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்கும் போது, இந்திய அலுவலர்கள் யாரும் அங்கு இருக்க மாட்டர்கள்" என்றார்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) டெல்லி வரும் அதிபர் ட்ரம்ப்புக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு, ராஜ்காட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
பின்னர், நண்பகல் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ட்ரம்ப் ஈடுபடுவார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இருநாட்டுக்கும் இடையே பாதுகாப்புத்துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
மாலையில், ஹைதராபாத் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை அமெரிக்க அதிபர் சந்திக்க உள்ளார்.
பயணத்தின் இறுதியில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒருங்கிணைக்கப்படும் விருந்தில் கலந்துகொண்ட பிறகு, அமெரிக்க அதிபர் நாடு திரும்புவார்.
இதையும் படிங்க : 'அமரேந்திர பாகுபலி... இல்ல இல்ல நம்ம ட்ரம்ப்(ப்ப்ப்)... '