தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவின் எதிர்ப்பை மீறி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும் கனடா பிரதமர்! - கனடா பிரதமருக்கு இந்தியா எச்சரிக்கை

ஒட்டாவா: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதவராக குரல் கொடுத்த கனடா பிரதமருக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், விவசாயிகளின் அறவழி போராட்டத்திற்கு தொடர்ந்து துணை நிற்பேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர்
கனடா பிரதமர்

By

Published : Dec 5, 2020, 1:57 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்கள் மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும்” என தெரிவித்திருந்தார்.

மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் போராட்டங்களும் நடைபெற்றது. இதனையடுத்து, கனடா பிரதமரின் கருத்துக்கும், தூதரகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கும் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தது.

இச்சூழலில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கனடா பிரதமருக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், உலகில் அறவழி போராட்டம் எங்கு நடைபெற்றாலும் அதற்கு தொடர்ந்து துணை நிற்பேன் என ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், அரசியல் தலைவர்கள் கனடா பிரதமருக்கு ஆதரவளிக்க வேண்டும் என பிரிட்டன் சீக்கிய கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிரட்டன் சீக்கிய கவுன்சில் தங்களது ட்விட்டர் பக்கத்தில், "மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்திய அரசுக்கு எதிராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும். அச்சுறுத்தலை கண்டு அஞ்சிவிடக்கூடாது" என பதிவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details