கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலக நாடுகள் அனைத்திலும் பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நோயிலிருந்து மக்களைக் காக்கவும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் உலகம் முழுவதுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் அயராது உழைத்துவருகின்றனர்.
இந்நிலையில், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில் இயங்கிவரும் மெக்டோனல் ஜீனோம் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட மரபணு மையங்களை ஒருங்கிணைத்து செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம், கரோனா தொற்றினால், பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத குழந்தைகள், இளைஞர்களின் மரபணு மாதிரிகளை சேகரித்து அவர்களின் நோய்த் தொற்று தடுப்பு ஆற்றலை ஆராய்ச்சி செய்துவருகிறது. இந்த வைரஸின் அதிகபட்ச தாக்கத்தை புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி பயன்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 என்ற வைரஸால் இதுவரை பாதிக்கப்படாத நபர்களையும் சோதனைக்கு உட்படுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இத்தகைய நபர்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான எதிர்ப்பு சக்திகள் அவர்களது மரபணுக்களிலிருந்து பெறலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆராய்ச்சி புதிய சிகிச்சை முறைகளுக்கு வழிவகுக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மரபணு ஆராய்ச்சி குறித்துப் பேசிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சியின் தலைவர் மருத்துவர் கூப்பர், கரோனாவும், மனித மரபணுக்களின் முயற்சியும் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆராய்ச்சி, தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகிறது.