ஐநாவின் பருவநிலை உச்சிமாநாட்டில் பேசிய ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் உலகத் தலைவர்களை கடுமையாக சாடினார். அதையடுத்து கிரேட்டாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
தொடர்ந்து கிரேட்டாவின் பேச்சைப் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தச் சிறுமி மகிழ்ச்சியாக இருக்கிறார். பார்க்க அருமையாக உள்ளது. இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது" என ட்விட்டரில் பதிவு செய்தார். அதேபோல் கனடா நாட்டு எம்.பி. மார்க்சின் பெர்னியர், கிரேட்டாவை நிலையற்ற மனநிலையில் உள்ளார் என கிண்டல் செய்தார்.
பருவநிலையை காக்க போர்ச்சுகலில் நடைபெற்ற பேரணி இதற்கு பதிலளிக்கும் விதமாக மாண்ட்ரியல் பேரணியில் கிரேட்டா பேசினார். அதில், "இளைஞர்களை உலகத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர். பருவநிலையைக் காக்கத் தேவையான திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. தனியாளாக தொடங்கிய போராட்டம் இன்று லட்சக்கணக்கானோர்களால் நடத்தப்பட்டுவருகிறது. மீண்டும் வேலைநிறுத்தம் செய்கிறோம். பேரணியில் ஈடுபடுகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளுக்கு கேட்கும்வரை நாங்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்" என்றார்.
மேலும், பருவநிலையைக் காக்க போராடுபவர்களை இனி கையாள்வது கடினமாக இருக்கும். எங்களை அமைதிப்படுத்த முயன்று வருகிறார்கள். அதனை நாங்கள் ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். கிரேட்டா தன்பர்க் ஐநா பொதுக்கூட்டத்தில் பேசிய பின்னர் உலக நாடுகளில் கிரேட்டாவுக்கான ஆதரவு பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:"உலகம் அழிவதைவிட பணம்தான் உங்களுக்கு முக்கியம்" - ஐநாவில் சீறிய சிறுமி!