அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் கூட்டாகச் சேர்ந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் ஒன்றை அமைத்துள்ளன. இந்த விண்வெளி மையத்துக்கு சுழற்சி முறையில் இந்த நாடுகளின் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
அப்படி அங்கு அனுப்பப்படும் வீரர்கள், விண்வெளி மையத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வர். அவர்கள் சில சமயம் விண்வெளி மையத்தை விட்டு வெளியேறி 'Space Walk' எனப்படும் விண்வெளி நடைபயணமும் மேற்கொள்வதுண்டு.
இந்த விண்வெளி நடைபயணத்தின் போது ஆண்களின் துணையோடு பெண் வீராங்கனைகளும் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, சர்வதேச விண்வெளி மையத்தின் வெளிப்புறத்தில் பேட்டரி ஒன்றில் ஏற்பட்ட கேளாரைச் சரிசெய்வதற்காக, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் (40), ஜெசிகா மேயர்(42) ஆகிய விண்வெளி வீராங்கனைகள் நேற்று விண்வெளி நடைபயணம் மேற்கொண்டனர்.
பெண் மட்டுமே உள்ளடங்கிய விண்வெளிக் குழு ஒன்று விண்வெளி நடைபயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், நாசாவின் நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது.