இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவுடனும் சீனா மோதல் போக்கை கையாண்டுவருகிறது. இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் மோதலை வல்லுநர்கள் வர்த்தக போர் என்றே அழைக்கின்றனர். உலகின் இரு பெரும் பொருளாதாரங்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலை வல்லுநர்கள் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.
இந்தச் சூழலில், அடுத்த 10 ஆண்டுகளில் தனது அணு ஆயுத கையிருப்பை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுவருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு இரட்டிப்பானாலும், சீனாவின் அணு ஆயுத கையிருப்பு என்பதை அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகவே இருக்கும். அமெரிக்காவிடம் தற்போது வரை 3,800 அணு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளன.
மேலும், அமெரிக்காவைப் போல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்ட விமானங்களும் சீனா ராணுத்திடம் இல்லை. இருப்பினும், அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கும் பணிகளிலும் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இணையுமாறு ட்ரம்ப் நிர்வாகம் சீனாவை வலியுறுத்தி வருகிறது.
ஆனால், சீனாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் பேச்சுவார்த்தை வரம்புகளில் சேர்க்க முடியாத அளவிற்கு சிறியது என்றும், இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் சேர சீனாவை அழுத்தம் கொடுப்பதன் மூலம் அமெரிக்க-ரஷ்யா ஆயுத ஒப்பந்தத்தை நீர்த்துப்போக ட்ரம்ப் அரசு முயற்சிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் “சீனா ராணுவ பலம்” குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "2049ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவை விட ஒரு சூப்பர் பவர் நாடாக சீனாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனா தனது அணுசக்தி ஆயுதங்களை நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் செய்துவருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவிடம் தற்போது குறைந்தபட்சம் 200 அணு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கலாம். அடுத்த 10 ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா எடுத்துவருகிறது.
அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்டு அணு ஆயுத ஏவுகணைகள் தற்போது சீனாவிடம் 100 இருக்கும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 200ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்ய பயணத்தில் சீன அமைச்சரை சந்திக்கிறாரா ராஜ்நாத் சிங்?