தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐநா மனித உரிமை ஆணைய தேர்தல் : சவுதி தோல்வி! - ஐநா மனித உரிமை ஆணையம் தேர்தல்

ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வெற்றிபெற்ற போதிலும் சவுதி அரேபியா தோல்வியை சந்தித்துள்ளது.

UN rights council
UN rights council

By

Published : Oct 14, 2020, 4:56 PM IST

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி, அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு உறுப்பினராக இருப்பதற்கான தேர்தல் இன்று (அக்.14) நடைபெற்றது.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமை ஆணையத்தின் 15 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆசியா பசிபிக் பிராந்தியத்தைத் தவிர, மற்ற பிராந்தியங்களில் போட்டியிடும் நாடுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தன. இதனால் அந்தப் பிராந்தியங்களில் உறுப்பு நாடுகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன.

ஆசிய பிராந்தியத்தின் உறுப்பினருக்காக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், நேபாளம், சீனா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போட்டியிட்டன. ஐநாவின் 193 உறுப்பு நாடுகளுக்கும் இத்தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டது. இதில் சவுதி அரேபியா வெறும் 90 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐநா இயக்குநர் லூயிஸ் சார்போனியோ, "இதில் சவுதி அரேபியா வெற்றிபெறத் தவறியது, ஐ.நா தேர்தல்களில் உள்ள அதிக அளவிலான போட்டியின் அவசியத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. போட்டி இன்னும் அதிகமாக இருந்திருந்தால் சீனா, கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் தோல்வியடைந்திருக்கும்" என்றார்.

முன்னதாக, கடந்த வாரம் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள், தேர்தலில் போட்டியிடும் சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, கியூபா, பாகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை எதிர்க்க ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. அந்நாடுகளில் மனித உரிமைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பதால் அவர்கள் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்று அவ்வமைப்புகள் வலியுறுத்தின.

ஆப்பிரிக்க பிந்திரயங்களில் இருந்து ஐவரி கோஸ்ட், மலாவி, காபோன், செனகல் ஆகிய நான்கு நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளும் போட்டியின்றி தேர்ந்த்தெடுக்கப்பட்டன.

மேலும், லத்தீன், அமெரிக்க, கரீபியன் பிராந்தியங்களில் இருந்து மெக்ஸிகோ, கியூபா, பொலிவியா ஆகிய நாடுகளும் மேற்கு ஐரோப்பிய பிரந்தியத்தில் இருந்து பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் போட்டியின்றி வெற்றிபெற்றன.

இதையும் படிங்க : அழகிய பெண்களை முத்தமிட ஆசை - பரப்புரையில் ட்ரம்பின் கிளுகிளுப்பு பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details