பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனாரோ அந்நாட்டில் நடைபெற்ற உள்ளூர் கிளப் கால்பந்து போட்டியைப் பார்க்க நேற்று மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். சான்டோஸ் என்ற அணியும் கிரிமியோ என்ற அணியும் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டியை பார்க்க வந்த அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தவில்லை எனக் கூறி அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிபர் போல்சனாரோ, போட்டியைக் கான நான் ஆவலுடன் வந்தேன்.
தடுப்பூசி செலுத்தவில்லை என என்னை அனுமதிக்கவில்லை. தடுப்பூசி செலுத்தியவர்களை விட எனது உடலில் அதிகளவிலான ஆன்டி பாடிகள் உள்ளன என்றார்.
சர்ச்சை நாயகன் ஜெயர்
பிரேசில் அதிபரான ஜெயர் போல்சனாரோ சர்ச்சைக்கு பெயர் போனவர். பெருந்தொற்று தீவிரமாக பரவிய 2020ஆம் ஆண்டு காலத்திலேயே இவர் பொதுவெளியில் முகமூடி அணிய மாட்டேன் என வீம்பு பிடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஜூலை 2020ஆம் ஆண்டு இவருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு மீண்டுவந்த இவர், தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மேலும், உலகளவில் கோவிட்-19 தொற்றை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்களில் ஒருவராக போல்சனாரோ விமர்சனத்துக்குள்ளானார்.
பிரேசில் நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை காலமானார்!