ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 13 அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
2011ஆம் ஆண்டுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் சந்தித்துள்ள மோசமான தாக்குதல் இதுவாகும். இச்சம்பவத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
'பழிக்குப்பழி நிச்சயம்'
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த ஜோ பைடன், "இச்சம்பவத்தை நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. உங்களை வேட்டையாடி, உரிய விலையைத் தருவோம்.
இதன் பின்னணியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளைக் கண்டறியும் பணியில் ராணுவத் தளபதிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை. எங்கள் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும்" என்றார்.
ஜோ பைடனின் பேட்டிக்குப்பின், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
இதையும் படிங்க:காபூல் குண்டுவெடிப்பு: ஐநா கண்டனம்