அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் குறைந்திருந்த கரோனா பரவல், அந்நாட்டின் அதிபர் தேர்தலுக்கு சில காலம் முன்பிருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கரோனா தடுப்பு மருந்திற்கு இன்னும் சில நாள்களில் அந்நாட்டில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள அமெரிக்கர்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கரோனா பரவல் காரணமாக தன் பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்திக்கொள்வது குறித்து சிந்தித்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோ பைடன், "நாம் இப்போது முதன்மையாக பின்பற்றக்கூடிய விஷயம் என்னவென்றால், மக்களைப் பாதுகாக்க வல்லுநர்கள் கூறியதைப் பின்பற்றுவதே! விரைவில் ஒரு இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
அமெரிக்கா முழுவதும் முன்பைவிட அதிகமானோர் வீடியோ கான்பரன்சிங் முறையை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். எனவே, எனது பதவியேற்பு விழாவில் குறைந்த நபர்கள் மட்டும் நேரில் பங்கேற்கும் விதத்தில் நடத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன்" என்றார்.
அமெரிக்காவில் தற்போது வரை 1.4 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்ச சில வாரங்களாகவே கரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஜோ பைடன் அழைப்பை ஏற்ற ஃபவுசி!