அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இந்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார். பல்வேறு சர்வதேச நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் விதமான முன்னெடுப்புகளை ஜோ பைடன் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடன் நேரடி சந்திப்பிற்கு ஜோ பைடன் திட்டம் தீட்டி வருகிறார். ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வரும் சூழலில், இரு நாட்டு உறவை சுமுகமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு தணிந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடைபிடித்து வரும் அடக்குமுறை போக்கிற்கு அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இதன் பின்னணியில் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜோ பைடன், புதினுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களின் சந்திப்பு எங்கே நடைபெறும் எந்த தேதியில் நடைபெறும் என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த சந்திப்பு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என வெளியுறவு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.