அமெரிக்காவில் ஜூன் மாதம் முதல் குறைந்திருந்த கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தொற்று நோய் வல்லுர் அந்தோணி ஃபவுசி உள்ளிட்ட பலரும் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.
இருப்பினும், மாஸ்க்கிற்கு எதிரான கருத்துக்களை ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தார். ட்ரம்ப்பின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாகவே உயிரிழப்புகள் 2.75 லட்சத்திற்கும் அதிகமானது என பலர் குற்றஞ்சாட்டினர்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஜோ பைடன் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிவதை கடமை என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடு முழுவதும் மாஸ்க்குகளை அணிவதைக் கட்டாயமாக்கவுள்ளதாக பரப்புரையின்போதே தெரிவித்த அவர், அது எளிமையான பணியில்லை என்பதையும் அவர் ஒப்புகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஜோ பைடன் அளித்துள்ள பேட்டியில்,"நான் அதிபராக பதவியேற்கும் நாளில் இருந்து சரியாக 100 நாள்களுக்கு மட்டும் அமெரிக்க மக்கள் மாஸ்க்குகளை அணியுங்கள். வாழ்நாள் முழுவதும் அணிய வேண்டாம், வெறும் 100 நாள்கள் அணியுங்கள். அதுவே கரோனா பரவலைக் கணிசமாக குறைக்கும்" என்றார்.