தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 25, 2019, 12:24 PM IST

Updated : Aug 25, 2019, 4:45 PM IST

ETV Bharat / international

'அமேசான் காடுகள் அழிவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' - பிரேசில் பழங்குடிகள் வலியுறுத்தல்!

பிரேசில்: அமேசானில் பரவிவரும் காட்டுத்தீயை அணைப்பது மட்டுமல்லாமல், காடுகள் அழிவதைத் தடுத்து நிறுத்த பிரேசில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்நாட்டு பழங்குடியினர் வலியுறுத்தியுள்ளனர்.

brazil tribes

உலகின் மிகப் பெரிய மலைக்காடு 'அமேசான்'. தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வடார், பொலிவியா, கையானா, சுரிநாம் உள்ளிட்ட நாடுகளில் அமேசான் காடு பரவியுள்ளது. அமேசானின் பெரும்பாலான பகுதி பிரேசில் நாட்டில்தான் அமைந்துள்ளது. இங்கு வருடம்தோறும் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமே.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி நாசமாகியது. பிரேசிலின் பாவ்சாவோ நகரமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிவது, உலக மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரேசில் அரசு மெத்தனம் காட்டிவருவதாக உலகத் தலைவர்கள் எழுப்பிய கண்டனத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சோனாரோ, தீயை அணைக்க ராணுவத்தை களமிறங்கியுள்ளார்.

இந்தப் பணியில், 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரேசில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெர்னான்டோ அஸ்வெடோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமேசான் காடுகளில் பரவிவரும் தீயை விரைந்து அணைப்பதோடு மட்டுமல்லாமல், காடுகள் அழிவதைத் தடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரேசில் பழங்குடியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, அந்நாட்டு பழங்குடியினர் ஓயி கயாபோ கூறுகையில், "அமேசானின் எதிர்காலம் குறித்து உலகமே பிரார்த்தனை செய்துவரும் வேளையில், ஜிங்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளான நாங்கள் காடழிப்பு, சுரங்கம் அமைப்பது உள்ளிட்டவைகளை எதிர்க்கிறோம்.

எங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, அவமதிக்கவோ கூடாது. எங்கள் நதியிலோ, உணவிலோ பூச்சிக்கொல்லியைக் கலக்கக்கூடாது. சட்டவிரோதமாகக் காட்டை எரிக்கக்கூடாது. அமேசான் காட்டுக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். எங்கள் போராட்டத்தில் உங்களின் பங்களிப்பும் தேவை", என்றார்.

Last Updated : Aug 25, 2019, 4:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details