வெனிசுவேலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிராகப் போராட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ, தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.
இதற்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எனினும், அதிபர் பதவியிலிருந்து தான் இறங்கப் போவதில்லை என்றும், பொதுத்தேர்தல் நடத்தப்படாது என்றும் மடூரோ திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் மனிதாபிமான உதவிகளை நாட்டுக்குள் கொண்டு வரவும் தடை விதித்தார். இதனையடுத்து, வெனிசுவேலாவில் பதற்றம் அதிகரித்ததோடு, மின்சாரம், உணவு, கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத்தொடரந்து 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிரேசில், கொலம்பியா, ஈக்குவடோர், பெரு உள்ளிட்ட பிற தென் அமெரிக்கா நாடுகளுக்கு படையெடுத்தனர்.