சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர். அஜித், விஜய்க்கு அடுத்து தமிழ் சினிமா மார்க்கெட்டில் இவருக்கு என்று தனி மவுசு உள்ளது. சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனது கடின உழைப்பால் தற்போது இந்த இடத்தை பிடித்துள்ளார் என்பதில் மாற்றமில்லை.
நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கரோனா காலகட்டத்தில் இவரது டாக்டர் படம் வெளியாகி ரசிகர்களை மீண்டும் திரையரங்குகள் நோக்கி படையெடுக்க வைத்தது. டாக்டர், டான் என அடுத்தடுத்து நல்ல வசூல் படங்களை கொடுத்துள்ளார்.
ஆனால் கடந்த ஆண்டு வெளியான இவரது "பிரின்ஸ்" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான இந்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இவரது கைவசம் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம், அயலான் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் "மாவீரன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். மண்டேலா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் தேசிய விருதும் பெற்றது. இதனால் இருவரும் இணைந்துள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகமெங்கும் மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பிரின்ஸ் திரைப்படம் சரியாக போகாததால் சிவகார்த்திகேயன் இனி அவ்வளவு தான் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. இதனால் இப்படத்தை வெற்றிப் படமாக கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கும், இயக்குனருக்கும் சண்டை என்று தகவல் பரவியது.
இதை எல்லாம் மீறி தற்போது படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நிம்மதியில் உள்ளனர். அயலான் திரைப்படம் தாமதமாகிக் கொண்டே போவதால் இப்படம் விரைவில் வெளியாவது சிவகார்த்திகேயனுக்கும் சற்று நிம்மதியை தரலாம் எனவும் பலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இதையும் படிங்க: Weekly Horoscope: ஏப்ரல் 4வது வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!