சென்னை:ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகிறது. இது நடிகர் கார்த்தி நடித்த 25வது படம் ஆகும். இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்.28) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குநர் ராஜு முருகன், கே.எஸ்.ரவிக்குமார், பா.ரஞ்சித், தமன்னா, லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஜப்பான் படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி மேடையில் பேசுகையில், “இந்த விழா பண்ணும் அளவிற்கு ஒன்னும் செய்யவில்லையே என கூச்சப்பட்டேன். ஆனால் பெரிய சாதனை என்பதை விட, சரியான பாதையில் செல்கிறோம் என நினைத்தேன். என்னுடைய ரசிகர்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை.
என்னுடைய 25 வயதுக்கு பிறகு என்னை வளர்த்தது என் ரசிகர்கள்தான். ஒரு மனிதனுக்கு உண்மையான அன்பு எங்கெங்கு கிடைக்கிறது முதலில் அம்மா. அடுத்தது, நம்மை விட்டுக் கொடுக்காத நண்பர் அடுத்தது, நம்மை நம்பி வரும் மனைவி அதற்கு இணையானது ரசிகர்கள்தான்.
ரசிகர்களின் அன்பு கிடைத்ததால், நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். இந்த அன்பிற்கு நான் தலை வணங்கி நன்றியுடன் இருப்பேன்.
என் ரசிகர்களை என் நெஞ்சில் வைத்திருக்கிறேன். முதலில் இயக்குநர் மணிரத்னம்தான். இந்த தொழிலில் மிக ஆர்வத்துடன் வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.
நடிப்புன்னா என்னன்னே தெரியாத என்னிடம் காலத்துக்கும் நிலைத்து இருக்கிற பருத்திவீரன் கதாபாத்திரத்தை நடிக்க வைத்த இயக்குநர் அமீர் அண்ணனுக்கும் இந்த தருணத்தில் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை விட அதிகமாக நம் மீது நம்பிக்கை வைக்கும் நண்பன் இருந்தால், எதையும் சாதிக்கலாம். ஞானவேல், நீ நடிக்க வேண்டும் நான் படம் எடுக்கிறேன் என படம் எடுத்தார். அதற்கு என் நன்றி. சண்டைக் காட்சிகள் கற்றுத்தந்த பாண்டியன் மாஸ்டருக்கு என் நன்றிகள்.