சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்தவர், ஷங்கர். இவரது இயக்கத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், இந்தியன். இதில், நடிகர் கமல்ஹாசன் சேனாபதி, சந்துரு என அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா கமல் ஊழல் செய்பவர்களைப் பழிவாங்கும் கதை போல இந்தியன் படம் எடுக்கப்பட்டது. இதில், அப்பா கமலின் கெட்டப் மிகவும் ரசிக்கப்பட்டது. படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார்.
இந்த நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சங்கர் தற்போது எடுத்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை, லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. மேலும், இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே சூர்யா என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது.
இதையும் படிங்க:எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா நிச்சயதார்த்தம்!
இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான போதும், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகே படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. அதன் பிறகும், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக பணிகள் தாமதமானது. அதன் பிறகு, பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது.
இது ஷங்கருக்கு முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இடையில், தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தையும் ஷங்கர் இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை (அக்.28) காலை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார். 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு, எச்.வினோத் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார்.
இதையும் படிங்க:36 ஆண்டுகளுக்கு பிறகு கமல் - மணிரத்னம் கிளாசிக் கூட்டணி.. வைரலாகும் 'KH234' வீடியோ!