சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், சத்யராஜ். இவர், தற்போது பல இளம் ஹீரோக்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் வெற்றி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜீவி, ஜீவி2 என தனித்துவமான படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். அதேபோல், அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவணப் படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சேகர் ஜி புரோடக்சன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம், டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.