சென்னை:சினிமா ரசிகர்களால் மிகப் பெரிய விருதாக பார்க்கப்படுவது, ஆஸ்கர் விருது. எப்படியாவது நமது இந்திய படம் ஒருமுறையாவது இந்த விருது பெற்று விடாதா என்பதே சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஏக்கமாக இருந்து வருகிறது. இப்படி எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருது இரண்டை கைகளில் ஏந்தி இந்தியராகவும், தமிழராகவும் நாம் ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்தினார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றார், இசை அமைப்பாளர் கீரவாணி. மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சார்பில் தமிழ் படங்கள் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. குறிப்பாக, சிவாஜி நடித்த தெய்வ மகன், கமல்ஹாசனின் தேவர் மகன், நாயகன் உள்ளிட்ட படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமா கூட்டமைப்பு சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வான படங்களில் இருந்து ஒரு படத்தை சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 96வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பாக முன்மொழியப்படும் திரைப்படம் குறித்த அறிவிப்பை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16 தேர்வுக் குழுவினர் தலைவர் சிரிஷ் கசரவல்லி தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று அறிவித்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து 22 மொழிகள் முன் மொழியப்பட்டு, அதில் இருந்து ஒரு படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம்-1, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி, இயக்குநர் பொன்குமார் இயக்கத்தில் வெளியான ஆகஸ்ட் 16,1947 திரைப்படமும் முன்மொழிந்த பட்டியலில் இருந்தது.