எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம், துணிவு. அஜித்துடன் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசை அமைக்க போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித் உள்பட யாருக்கும் பிடிக்காததால், இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.
நயன்தாரா மூலம் தூது விட்டுப் பார்த்த விக்னேஷ் சிவனின் முயற்சி வீண் போனது. இதனை அடுத்து ஏ.கே. 62 படத்துக்கான இயக்குநர் வேட்டையை தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் படுவேகமாக நடத்தி வருகிறார். இந்த பட்டியலில் விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், தரணி என ஏகப்பட்ட இயக்குநர்கள் பெயர் அடிபட்டது. ஆனால், திடீரென மகிழ் திருமேனி தான் அஜித்தை இயக்க உள்ளார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின.
மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதியை வைத்து 'கலகத் தலைவன்' படத்தை இயக்கியிருந்தார். இவரது முந்தைய படங்களான தடையற தாக்க, தடம், மீகாமன் ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. இதனால் அஜித்துடன் இவர் இணைவதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அஜித் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பாளர் என்று கூறி வருகின்றனர். மகிழ் திருமேனி ஏற்கனவே விஜய்க்கு சொன்ன கதையில் தான், அஜித் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. எப்படியும் அதிரடி ஆக்சன் படமாகத் தான் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முன்னணி நடிகரின் படம் குறித்து இத்தகைய குழப்பங்கள் நிலவி வருவது கோலிவுட்டில் பேசுபொருளாகி உள்ளது.
இதையும் படிங்க: கல்வி அரசியல் பேசும் 'வாத்தி' டிரெய்லர் வெளியானது!