சென்னை:திரைப்பட சண்டைக் காட்சியின்போது முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த ‘என் உயிர் தோழன்’ திரைப்பட நடிகர் பாபு இன்று உயிரிழந்தார். கரோனா காலத்தில் தொடங்கி தற்போது வரை திரையுலகில் மனோபாலா, மயில்சாமி, ஆர்.எஸ்.சிவாஜி, மாரிமுத்து என பல கலைஞர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இன்று 1990களில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாபு உயிரிழந்தார். சினிமா கனவுகளுடன் சென்னை வந்த பாபு, பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின்னர் 1990இல் பாரதிராஜா, தான் இயக்கிய ‘என் உயிர் தோழன்’ படத்தில் பாபுவை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இளையராஜா இசையில் “குயிலும் குப்பம் கோபுரம் ஆனதென்ன” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
அந்த படம் முதல், பாபு ’என் உயிர் தோழன் பாபு’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பாபு அடுத்தடுத்து பல கிராமத்து கதைகளில் கமிட்டானார். பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ஆகிய படங்கள் நடித்து வெளியானது. கோலிவுட்டில் முண்ணனி நடிகராக முன்னேறி வந்த என் உயிர் தோழன் பாபு, ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார்.