விஜய்யின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் ஒரு காரணம் சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நேற்று (டிச.28) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், நேற்று இரவு நடிகர் விஜய் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று, விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
விஜய் - விஜயகாந்த் நட்பு:நடிகர் விஜய்யை நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார், அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னதாக, வெற்றி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருப்பார். இந்த படத்தின் கதாநாயகன் விஜயகாந்த் மற்றும் கதாநாயகி விஜி. இந்த படம் படக்குழுவினருக்குப் பரவலான வெற்றியைத் தேடித் தந்தது.
அதனைத் தொடர்ந்து விஜய்யை ஹீரோவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ் சினிமாவில் அப்போதைய ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜயகாந்தை, செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்-க்கு அண்ணணாக கெளரவ வேடத்தில் நடிக்க இயக்குநரும், தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்திடம் கேட்டுக் கொண்டார்.
இதனால் விஜய்காந்த் நடிக்க ஒப்புக்கொண்டு அந்த படத்தில் நடித்தார். இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருமுறை கூறுகையில், "விஜய்யை மாஸ் ஹீரோவாக்க நினைக்கிறேன். அதற்கு நீங்கள் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஓப்பனாக கேட்டேன். அப்போது பீக்கில் இருந்த விஜயகாந்த் தனக்காக கதை கேட்காமல் எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்டு ஒப்புக் கொண்டார்" என கூறி இருப்பார்.
அதன்படி, செந்தூரப்பாண்டி படமும், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, விஜய்க்கு இந்த படம் திருப்பு முனையாக அமைந்தது. செந்தூரப்பாண்டி படத்தில், விஜய்க்கும் விஜயகாந்திற்கும் பெற்றோராக மனோரமா மற்றும் விஜயகுமார் நடித்திருப்பர். இந்த படத்தில் கதாநாயகியாக யுவராணி நடித்திருப்பார். அவருக்கு அண்ணணாக அப்போதைய வில்லன் பொன்னம்பலம் நடித்திருப்பார்.
இந்த படத்தில் விஜய்யும், யுவராணியும் காதலித்து வருவர். அதற்கு எதிரியாக பொன்னம்பலம் இருக்க, சிறையில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த், காதல் ஜோடிகளைச் சேர்த்து விட்டு, பொன்னம்பலத்தைக் கொன்று மீண்டும் சிறைக்குச் சென்று விடுவார். தற்போது தமிழ் சினிமாவில் விஜய்யை மாஸ் ஹீரோவாக, ஓப்பனிங்க் ஹீரோவாக, வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடுவதற்கு இந்த படமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நடிகர் விஜய் 1998ஆம் ஆண்டு விஜயகாந்த் பற்றி ஒரு வீடியோவில் கூறி இருப்பார். அதில், “கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ் என இரண்டு விதமாக ஆடியன்ஸ் உள்ளனர். அதில் மாஸ் ஆடியன்ஸ் ஒரு நடிகனை நடிகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி அண்ணன் விஜயகாந்த் பெரிய ஹீரோ.
விஜயகாந்த் வச்சு எங்க அப்பா ஒரு படம் பண்ணும்போது அதில், விஜயகாந்திற்கு தம்பியாக என்னை நடிக்க வைத்தார்கள். விஜயகாந்த் பார்க்க வரும் ஆடியன்ஸ்-க்கு அந்த படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். இதற்காக தான் அந்த படம் பண்ணது. படம் வெற்றி அடைந்தது. நாங்கள் நினைச்சது நடந்தது” என வீடியோவில் கூறி இருப்பார். இவ்வாறு, விஜய்யின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் ஒரு காரணமாக அமைந்தார் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.
இதையும் படிங்க:‘நம்ம படம் எடுப்போம் நண்பா..’ ராவுத்தர் பிலிம்ஸ் கம்பெனி உருவானதன் பின்னணியில் விஜயகாந்த்!