சென்னை:கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டுவடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நேற்று (நவ.6) விருமாண்டி திரைப்படம் திரையிடப்பட்டது. நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு 'விருமாண்டி' திரைப்படம் திரையிடப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான இந்த படத்தை, ரீ-ரிலீஸ் என்ற பெயரில் 3 நாட்களுக்கு திரையிடப்பட்டு, அந்த படத்திற்கான டிக்கெட்டின் விலை ரூ.49-க்கு விற்பனையாகிறது.
ரீ ரிலீஸ் செய்யப்படும் விருமாண்டி திரைப்படத்தை, ரோபோ சங்கர் தலைமையில் திரையரங்கில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திரையரங்க வளாகத்தில் இந்த கொண்டாட்டங்கள் நேற்று அரங்கேறின. இதில் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்க நடனமாடியும், தேங்காய் உடைத்தும் உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடினர்.
இதற்காக பாதுகாப்பு பணியில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். திரையரங்கத்திற்கு ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர், சினேகன், அவரது மனைவி கன்னிகா உள்பட பலரும் வந்தனர். விருமாண்டி திரைப்படம் கமல் இயக்கிய படங்களில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.