சென்னை:யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீ நாத், விதார்த், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் "இறுகப்பற்று". இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் நன்றி அறிவிக்கும் விழா சென்னையில் இன்று (அக்.12) நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விக்ரம் பிரபு, அபர்ணதி, விதார்த் ஆகியோரும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, "இறுகப்பற்று" படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் விதார்த் பேசும் போது, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு எனக்கு வெற்றிவிழா இந்த படம் தான். ஒவ்வொரு படத்துக்கும் இதை எதிர்பார்த்ததேன். நல்ல படமாக மட்டுமே இருந்தது, மக்களிடம் சென்று சேரவில்லை. ஒரு நல்ல படத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். ரசிகர்களும் படம் பார்த்துவிட்டு படம் பற்றி பகிர்ந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பேசினார்.
அவரை தொடர்ந்து நடிகை அபர்ணதி பேசுகையில், "இந்த படத்தில் நடித்ததற்கு நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படத்தை பார்த்த பலரும் இதுவரை ஒரு குறைகூட சொல்லவில்லை. மனதுக்கு நெருக்கமாக இருந்தது. மேலும் சினிமாவில் வருவதற்கு முன்பு நடிக்க முயற்சித்த காலத்தில் சினிமாவில் என்ன கிழிக்க போகிறார் எனது நண்பர் ஒருவர் கூறினார். அவர் இன்று துபாயில் என் படத்தின் டிக்கெட்டை கிழித்துவிட்டு படத்திற்கு செல்கிறார். அடுத்து எப்பொழுது நல்ல படம் நடிப்பேன் என தெரியாது அப்போது மீண்டும் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசுகையில், "ஒரு படம் பண்ணும் போது வெற்றியை தாண்டி, நன்றி என்று கூறுவது எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. படம் பார்த்தவர்கள் நிறைய மெசேஜ் அனுப்பி வருகின்றனர். ஒளிப்பதிவாளர் கோகுல் உண்மையாக பெண்ணாக இருந்தால் கல்யாணம் செய்து கொள்வேன்.