நடிகர் சரத்குமார் சென்னையில் இன்று (செப்.28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் அடுத்து நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசினார்.
அப்போது ”பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்தது எனது பாக்கியம். மணிரத்னம் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சோழரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள இப்படம் உதவியாக இருக்கும்.
தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கும். இப்படத்திற்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் மிகப் பெரிய சுற்றுலா தளமாக மாறும். மக்களின் எதிர்பார்ப்பு இதில் இருக்கும். பொன்னியின் செல்வன் படத்தை நாகர்கோவிலில் பார்க்க உள்ளேன். தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறேன். ஹீரோ, வில்லன் எல்லாம் கிடையாது.
விஜய் சேதுபதி விக்ரமில் வில்லனாக நடித்துள்ளார். மக்களின் ரசனை மாறிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல் நடிக்க வேண்டும். ’ரோஜா’ முதல் பான் இந்தியா படம்தான். வட இந்தியாவில் தென் இந்திய படங்களை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் சிறந்த படங்களை எடுத்தால் சிறப்பாக இருக்கும். ஓடிடிகளில் நிறைய மொழி படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாடியே இப்படம் எடுத்திருந்தால் வந்தியத்தேவனாக நடித்திருப்பேன்.
மொத்தம் 150 நாள் படப்பிடிப்பில் 60 நாட்களுக்கு மேல் நான் நடித்துள்ளேன். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கும்போது எனக்கு காயம் ஏற்பட்டது. வலியை பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுத்தேன். நாங்கள் பயன்படுத்திய அத்தனை நகைகளும் உண்மையான நகைகள் தான். எம்ஜிஆர் எடுக்க நினைத்த படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சி.