சென்னை:இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறி, தமிழ் சினிமாவில் தனக்கான தனி திரில்லர் வகையால் ரசிகர்களை வைத்திருப்பவர், விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. அதேநேரம் இந்த திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது.
எனவே, பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகமும் உருவாகத் தொடங்கியது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமின்றி, முதல் முறையாக இயக்கியும் உள்ளார். இதனையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, விஜய் ஆண்டனி படகு விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தொடர்ந்து சென்னை வந்த அவருக்கு, தாடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த விஜய் ஆண்டனி, தாம் குணமடைந்து விட்டதாகவும், பிச்சைக்காரன் 2 படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இருப்பதாகவும் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.