சென்னை:விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து, வருகிற ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த திரைப்படத்தை பத்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் டைட்டில் பாடல் (title track) வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் ரொமான்ஸ், சஸ்பென்ஸ் உள்ளிட்டவற்றை கதையுடன் சேர்த்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
மேலும், இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கெவின் ஜே பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், ப்ராதிமா கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் ஆகிய இரண்டு பதிப்பிலும் அஷ்வினி கல்சேகர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி சமீபத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்து பாலிவுட்டில் வரவேற்பைப் பெற்றார். முன்னதாக, விஜய் சேதுபதி மாநகரம் படத்தின் இந்தி பதிப்பான மும்பைக்கார் படத்தில், முனிஷ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:2023ஆம் ஆண்டு ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சிறந்த 10 படங்கள் ஒரு பார்வை..!