சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், லியோ படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், "லியோ" இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த "வாரிசு" திரைப்படம் ஜனவரி 2023இல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2,000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் "லியோ" திரைப்படம், அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.
"லியோ" திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிரமாண்டமானதாக இருந்து வருகிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது.
பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகளை தொடங்கி முன்னோடியான நகர்வை மேற்கொண்டது. இந்த உத்தி மிகப் பிரமாதமாக பலனளிப்பதாக தெரிகிறது. "லியோ" இப்போது இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.