சென்னை:நடிகர்விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தங்களது 7ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி தற்போது ‘ரத்தம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து ‘ஹிட்லர்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி, இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்தை ஆக்ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும்.