சென்னை:தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ். தனது சினிமா வாழ்வில் ஆரம்ப காலகட்டத்தில் உடல் கேலிக்கு ஆளான தனுஷ், தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று தன்னை நிருபித்து காட்டினார். இவர் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் வட சென்னை. மேலும் இப்படத்தில் அமீர், ஐஷ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ராஜன் மற்றும் அன்பு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்த அமீர் மற்றும் தனுஷின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
வட சென்னை மக்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாக சொன்ன படங்களில் வட சென்னை படமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தின் வசனங்களும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.