சென்னை: அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார்.
ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார்கள். புலனாய்வு திரில்லர் ஜெனரில் உருவாகி உள்ள இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
ஜூன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய நிகிலா விமல், என்னை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தயாரிக்கும் 'போர் தொழில்' படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
குறிப்பாக முதன் முதலில் என்னிடம் கதை சொல்ல வந்த விக்னேஷ் ராஜா லெப்டாப்பில் இசையை ஒலிக்கவிட்ட வாறு கதை சொன்னார். அவரின் அந்த புது முயற்சியும், அனுகுமுறையும் என்னை வெகுவாக கவர்ந்தது எனவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் இந்த படத்தில் நடிக்க தான் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து பேசிய, நடிகர் அசோக் செல்வன் , '' எனக்கு மிகவும் பிடித்த திரைக்கதை போர் தொழில்" என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 2015 ஆம் ஆண்டில் இப்படத்தின் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம் எனவும் இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும், விளம்பர படங்களிலும் பணியாற்றிருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.