தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"நான்கரை ஆண்டுகால உழைப்புதான் அமைச்சர் பதவி" - உதயநிதி ஸ்டாலின்

நான்கரை ஆண்டுகால உழைப்பின் பலன்தான் அமைச்சர் பதவி என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நான்கரை ஆண்டுகால உழைப்புதான் அமைச்சர் பதவி - உதயநிதி ஸ்டாலின்
நான்கரை ஆண்டுகால உழைப்புதான் அமைச்சர் பதவி - உதயநிதி ஸ்டாலின்

By

Published : Mar 12, 2023, 6:37 AM IST

சென்னை:இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம், கண்ணை நம்பாதே. இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் மு.மாறன், உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, மாரிமுத்து, செண்ட்ராயன், இசையமைப்பாளர் சித்து குமார், வசுந்தரா, சுபிக்‌ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற கண்ணை நம்பாதே திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் மாரிமுத்து, "உதயநிதி பெயரைச் சொல்லும்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி என்றார். இன்னும் சில காலத்தில் இது போன்று தான் எல்லோரும் அவரை அழைப்பார்கள். இந்த படத்திற்கு நிறைய சோதனைகள் வந்தது. கரோனா கூட சோதனையாக அமைந்தது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உதயநிதி விளங்குகிறார். இவர் அமைச்சர்தான். ஆனால் எல்லோரும் இவரை முதலமைச்சராக பார்க்கிறார்கள்" என்றார்.

இதனையடுத்து பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், "நிறைய சோதனைகளைக் கடந்தாலும் ரசிக்கக் கூடிய படமாக இது இருக்கும். அதனை இந்த வாரம் நீங்கள் பார்ப்பீர்கள். 20 வருடங்களுக்குப் பிறகு பூமிகாவுடன் இணைந்து நடித்துள்ளேன். உதயநிதி மிகவும் அமைதியான நபர். இயக்குனரின் மிகப்பெரிய பலமே திரைக்கதை. கிரைம் குறித்து நிறைய ஆய்வு செய்துள்ளார். அடுத்த படமும் ஜிவியுடன் இணைந்து மாறன் இயக்கத்தில் நடித்து வருகிறேன்" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடிகை ஆத்மிகா, "பணம், புகழ் எல்லாம் இருந்தாலும் ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) உள்ளது" என்று பேசினார். இதன் பின்னர் பேசிய நடிகர் பிரசன்னா, "இயக்குனர் மு.மாறன் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் இந்த படத்திற்காக உழைத்துள்ளார். இவருக்காக இப்படம் வெற்றி அடைய வேண்டும்.

எனக்கும் உதயநிதிக்கும் டூயட் மட்டும்தான் இல்லை. அந்த அளவுக்கு இணைந்து பணியாற்றி உள்ளோம். ஒரே பாடலில் பெரிய ஆளாக ஆவதுபோல், உதயநிதி இந்த படத்தின்‌ மூலம் பெரிய ஆளாக மாறியுள்ளார். அதாவது, படம் தொடங்கும்போது திமுகவில் பொறுப்பில் இருந்த அவர், பிறகு இளைஞரணி தலைவராகி, அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகி, தற்போது அமைச்சராக உள்ளார்" என்றார்.

இதனையடுத்து பேசிய அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், "இந்த படம் வெளியாகுமா என்ற அச்சம் இருந்தது. ஆனால், தற்போது ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. முதலில் இயக்குனர் எனக்கு காதல் கதைதான் சொன்னார். ஆனால் நான்தான் கிரைம் த்ரில்லர் கதை வேண்டும் என்று கேட்டேன். இந்த படத்தில் நான் 5 கெட்டப்பில் வருகிறேன். கலகத் தலைவன், நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் படத்தின் கெட்டப்பில் எல்லாம் இதில் வருவேன்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ படத்தில் முதலில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அதில் நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. அதனால் அருள்நிதியை நடிக்கச் சொன்னேன். நான் ஒரே பாட்டில் அமைச்சர் ஆகவில்லை. நான்கரை ஆண்டுகள் உழைத்துதான் இந்த பதவிக்கு வந்துள்ளேன்" என்று கூறினார். மேலும் இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. வருகிற 17ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாக ரெட் ஜெயின்ட் மூவிஸ் சினிமா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க:நடிகை ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details