சென்னை: தமிழில் முதன்முறையாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் 'The Warrior' திரைப்படத்தில் சிலம்பரசன், ஹரிபிரியா பாடிய 'புல்லட்' முதல் சிங்கிள் பாடலை சென்னையில் நேற்று(ஏப். 22) உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள 'தி வாரியர்' படத்தை சீனிவாசா சிந்தூரி தயாரித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் 'தி வாரியர்' படத்தின் புல்லட் என்ற சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சிம்பு, ஹரிபிரியா குரலில்..: இவ்விழாவில் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, விவேகா, தேவிஶ்ரீ பிரசாத், ஆதி, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்பாடலை நடிகர் சிம்பு மற்றும் ஹரிப்பிரியா இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் பாடலாசிரியர் விவேகா ஆவார்.
உக்ரைனில் போர் நடப்பதால் அங்கு மட்டும்தான் தேவிஶ்ரீ பிரசாத்தின் பாடல்கள் இல்லை. கீர்த்தி ஷெட்டி கூறுகையில், 'தமிழில் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று 'பையா'. அவரது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. 'உபென்னா' தமிழில் வெளியாகவில்லை. ஆனாலும், தமிழ் ரசிகர்கள் எனக்கு வரவேற்பு அளித்துள்ளனர் நன்றி' என்று கூறினார்
ஆதி கூறுகையில், 'வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. ராம் தமிழ் சினிமாவிற்கு உங்களை வரவேற்கிறேன்' என்று கூறினார்.
தேவிஶ்ரீ பிரசாத் கூறுகையில், 'உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் மிகவும் அமைதியானவர். இந்த பாடலை நீங்கள் வெளியிட்டதற்கு நன்றி. லிங்குசாமி நன்றாக கவிதை எழுதக்கூடியவர். இந்த கரோனா காலகட்டத்தில் வாரியராக இருந்த முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. இப்பாடலை பாடிய சிம்புவுக்கு நன்றி' என்று கூறினார்.