தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிடத்தடை இல்லை! - gautham vasudev menon

நடிகர் சிம்பு நடித்து நாளை (செப்டம்பர் 15) வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதால், படம் வெளியாவதற்கு எந்த தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை இல்லை
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை இல்லை

By

Published : Sep 14, 2022, 3:38 PM IST

சென்னை:நடிகர் சிம்பு நடித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்துக்குத் தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மனுவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க ’சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் படத்தை தயாரிக்க இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களிடம் கூறிய அதே கதையை 'வெந்து தணிந்தது காடு' என்ற பெயரில் படமாக எடுத்து, நாளை வெளியிட இருப்பதாகவும், தங்களுக்குத் தரவேண்டிய 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.மணிகண்டன், 2018ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி, ஒப்பந்தம் செய்தது உண்மைதான் என்றும்; அடுத்த படத்தை இயக்கும் முன் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி வழங்கி விடுவதாகவும், இது சம்பந்தமாக மனுதாரருடன் சமரசம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

சமரசம் செய்து கொள்ள மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இதனால் நாளை (செப்டம்பர் 15) இந்தப் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

இதையும் படிங்க:நிறைவுபெற்றது ‘மாமன்னன்’ படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details