மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் தளபதி 67 என அழைக்கப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு தொடங்கி தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இப்படத்தில் திரிஷா, இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்த விஜய் மற்றும் திரிஷா ஜோடி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் இசை உரிமையை ரூ.16 கோடிக்கு சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளுக்கு பிந்தைய ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போன்று தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று (பிப். 3) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளம் இருப்பதாலும் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாலும் எப்படியும் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமாத்துறையிலும் வடமாநிலத்தவர்கள் நுழைந்துவிடுவார்கள் - நடிகர் ராதாரவி