சென்னை: தமிழ் சினிமாவில் த்ரில்லர் காமெடி ஜானரில் சென்னை 28, பிரியாணி என பல படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய நடிகர் அஜித்தின் 50வது படமான மங்காத்தா பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய ஹிட்டடித்தது. வெங்கட் பிரபு உடன் சிம்பு இணைந்த மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இது வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்சன்ஸ், பவன்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ’வெங்கட் பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு உருவாகி வருகிறது. இந்த கஸ்டடி படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
தனது முதல் தமிழ் படம் என்பதால் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக படத்தின் தமிழ் பதிப்பில் நாக சைதன்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படமாக ’கஸ்டடி’ திரைப்படம் அமைந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடியத் திரைப்படமாக இது அமைந்திருக்கிறது. படத்தின் டேக் லைனாக அமைந்துள்ள ‘A Venkat Prabhu Hunt’, இயக்குநர் வெங்கட்பிரபுவின் ரசிகர்களிடையேயும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ‘கஸ்டடி’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இப்படம் ஏற்படுத்தியுள்ளது. ஆக்சன் எண்டர்டெயினர் படமாக இது உருவாகியுள்ளதால், வெங்கட் பிரபுவின் மேஜிக் இதிலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
’கஸ்டடி’ படத்தில் மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அப்பா-மகன் ஒரே படத்தில் இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார்கள். இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்காக இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள்.
இன்று வெளியாகியுள்ள டீசரில் நாக சைதன்யா, அரவிந்த் சுவாமி மற்றும் சரத்குமாருக்கும் இடையிலான கேட் அண்ட் மவுஸ் கேம் பற்றிய விஷயங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் ரசிகர்களை கவரக்கூடிய நடிகர் அரவிந்த் சுவாமி, இந்தப் படத்திலும் தன் ரசிகர்கள் விரும்பக்கூடிய சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
‘கஸ்டடி’ திரைப்படம் உலகம் முழுவதும் மே 12 அன்று திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. நாக சைதன்யாவின் சினிமா பயணத்தில் அதிக அளவிலான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'The Elephant Whisperers' ஒலி பதிவு.. சவுண்ட் மிக்ஸிங் வல்லுநர் லாரன்ஸ் கூறிய சுவாரஸ்ய நிகழ்வு!