சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், இன்று (ஏப்ரல் 30) சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கிய இதன் வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சசிகுமார், பிரகாஷ் ராஜ், தேவயானி இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி மற்றும் தயாரிப்பாளர் உரிமை காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி மற்றும் மன்னன் ஆகியோர் போட்டியிட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மொத்தம் ஆயிரத்து 406 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவின் முடிவில் மொத்தம் ஆயிரத்து 111 வாக்குகள் பதிவாகி உள்ளன. 300 வாக்குகள் பதிவாகவில்லை. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 1) காலை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.