சென்னை:பண்ணைபுரம் கிராமத்தில் பிறந்து திரையுலக இசையில் பல சாதனைகளைப் படைத்து பட்டிதொட்டியெல்லாம், இசையை பரவ செய்து தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உள்ளவர், இசைஞானி இளையராஜா. இன்று (ஜூன் 2) தனது 80வது பிறந்தநாளை கொண்டாடும் இவர், சினிமா வாழ்க்கையில் 48வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.தனது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்த ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் இளையராஜா.
தமிழ் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என 1000 திரைப்படங்களில் 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவர் இசையமைப்பாளர் இளையராஜா. கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ரசிகர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடினார். பின்னர் ரசிகர்களுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில், இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா இளையராஜாவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதேபோல் நடிகர்கள் பிரபு, ராமராஜன், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பாடகர் மனோ, பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதன்பின், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அதன் தலைவர் தினா, 'தங்களின் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்க இங்கு வந்துள்ளதாகவும், இது தங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தை புதுப்பித்து தருவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்ததாகவும் கூறினார். இதனிடையே, கரோனா காரணமாக அது தடைப்பட்டதாகவும், தற்போது அதனை செய்து தருவதாகவும் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான உரிய அனுமதியை விரைவில் பெற்றுக்கொடுப்போம் என்றார். தங்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை இன்று கொடுத்த இசைஞானிக்கு எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரின் சார்பிலும் நன்றி' எனவும் அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.