சென்னை: இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பருந்தாகாது ஊர்க்குருவி". லைட்ஸ் ஆன் மீடியா தயாரிப்பில் நிஷாந்த் ருஷோ, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ரஞ்சித் ஜெயக்கொடி, முத்துக்குமார், கார்த்திக் சீனிவாசன், விருமாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "இந்த கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. நான் இயக்குநர் ராம் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலை பார்த்த போது, இயக்குநர் தனபாலன் எனக்கு சீனியர். அப்போது நான் சட்ட கல்லூரியில் படித்தது ஆபிசில் யாருக்கும் தெரியாது. தனபாலுக்கு மட்டும் தான் தெரியும். அப்போதே எனக்கு பல அறிவுரைகளை கூறினார். எனக்கு முன்பே தமிழ் சினிமாவை புரிந்து கொண்டவர்.
ஒரு உதவி இயக்குநராக, அவர்களிடம் இருந்து தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். சினிமாவுக்கு நான் 15 ஆண்டு காலம் கழித்து வந்ததே தாமதம் என்று நினைத்தேன். ஆனால் என்னை விட தனபால் தாமதமாக வந்திருக்கிறார். எனினும் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார். வெற்றி என்பது அடுத்தவர்கள் சொல்வது அல்ல. நாம் உணர்வது தான்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அயலி படத்தின் இயக்குநர் முத்துக்குமார், "மாரி செல்வராஜ் இருக்கும் போது நான் எப்படி பேசுவது? ஒவ்வொரு புதுப்புது முயற்சிகள் பலருக்கு அடுத்த வாய்ப்பை வாங்கி தரும். ரசிகர்களுக்கு புதிய கதையை கொடுக்கும். இந்த பாதை ராஜபாதையாக மாற வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டார்.