சென்னை: கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் பருத்திவீரன். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மேலும் பிரியாமணி, எடிட்டர் ராஜா முகமது உள்ளிட்டோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த கார்த்தி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நாயகனாக முத்திரை பதித்தார். பருத்திவீரனின் தொங்கிய அவரது சினிமா பயணம் சமீபத்தில் வெளியான அவரது 25வது படமான ஜப்பான் வரை தொடர்கிறது. இந்த நிலையில் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியுடன் பணியாற்றிய அனைத்து இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் இயக்குநர் அமீர் அழைக்கப்படவில்லை. மேலும் கார்த்தி நேரடியாக தன்னை அழைக்கவில்லை எனவும், அதனால் நான் கலந்து கொள்ளவில்லை என்று சமீபத்திய விழா ஒன்றில் அமீர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேசுகையில், அதில் இயக்குநர் அமீரை திருடன் என்று அவமரியாதையாக பேசியிருந்தார்.
இந்த விஷயம் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மேலும் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் படத்தை முதல் காப்பி அடிப்படையில் ரூ 2.75 கோடியில் எடுத்துத்தர ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படத்தை முடிக்கும் போது அதன் பட்ஜெட் ரூ.4.85 ஆனதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த கூடுதல் செலவின் காரணமாக தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஞானவேல் ராஜாவின் இந்த பேட்டிக்கு கண்டனம் தெரிவித்து அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அப்படத்தில் பணியாற்றிய இயக்குநர் சமுத்திரக்கனி, சசிகுமார், படத்தில் நடித்த பொன்வண்ணன் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளையும் அமீருக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சுதா கொங்கரா, கவிஞர் சினேகன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து இயக்குநர் அமீர் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பருத்திவீரன் தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை எனவும், அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் எனவும் கூறியிருந்தார்.
மேலும் பருத்திவீரன் படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்சனையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது என்று காட்டமாக கூறியிருந்தார். அதன் பிறகே சமுத்திரகனி, பொன்வண்ணன், சினேகன் உள்ளிட்டவர்கள் அமீருக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி யாருமே இதுவரை வாய் திறக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சூர்யா, கார்த்தி இருவரும் வாய் திறந்தாலே இந்த விஷயத்தில் ஒரு முடிவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது மதுரையில் மழை போன்ற இயற்கை காரணங்கள், படப்பிடிப்பு நினைத்த நேரத்தில் தொடங்க முடியாமல் தாமதம் ஆனது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள சினிமா தயாரிப்பில் முன் அனுபவம் இல்லாத ஞானவேல் ராஜா இக்கட்டான சூழலில் இருந்துள்ளார். இதனால் கையில் உள்ள பணமும் கரைய, சிவகுமாரும் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் படத்தின் தயாரிப்பு பொறுப்பை அமீரிடமே கொடுத்துவிட்டு சென்றுள்ளார் ஞானவேல் ராஜா. அதன்பிறகு தனது நண்பர்கள் உதவியுடன் எங்கெங்கோ கடன் வாங்கி ஒருவழியாக படத்தை முடித்துவிட்டார் அமீர். படம் நன்றாக வந்துவிட்டதை அறிந்த ஞானவேல் ராஜா மீண்டும் அமீரை தொடர்பு கொண்டு படத்தை கேட்டுள்ளார். ஆனால் படத்தின் பட்ஜெட் இப்போது இருமடங்கானது. இதனால் இதற்கான பணத்தை அமீர் கேட்க சங்கத்தின் மூலம் பேசி படத்தை வாங்கிவிட்டார் ஞானவேல்ராஜா என்கின்றனர். இந்த வழக்கு தான் இன்று வரை நடந்து வருகிறது.
அதாவது 2.85 கோடி முதல் காப்பி அடிப்படையில் எடுத்த படத்துக்கு அதைவிட அதிகமாக 4.85 கோடி கொடுத்து ஞானவேல் ராஜா படத்தை கைப்பற்றிவிட்டார். ஆனால் இந்த தொகை அமீருக்கு திருப்தியாக இல்லை இதனால் தான் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது ஞானவேல் ராஜா நேர்காணலில் அநாகரிகமாக வார்த்தையை உபயோகித்ததால் இந்த பிரச்சனை மீண்டும் வெளியே வந்துள்ளது. அமீருக்கு இந்த விவகாரத்தை முடித்து வைக்கவே விருப்பம் என சமீபத்தில் இவர் கொடுத்த நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் இரு பெரும் ஹீரோக்களை வைத்துக் கொண்டு இதில் தற்சமயம் அதிக அவப்பெயர் சிவகுமார் குடும்பத்துக்கு தான் என்பதால் பேசித் தீர்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. என்ன முடிவு எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு கிளாசிக் படத்தின் மூலம் அந்த இயக்குநருக்கு நிம்மதி இல்லை என்பது எத்தனை அநியாயமான விஷயம். 16 ஆண்டுகளாக பற்றி எரியும் இந்த பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு எட்டப்படும் என்று நம்புவோம்.
இதையும் படிங்க: ‘தில்லானா மோகனாம்பாள்’ பட புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்!