சென்னை:நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியானது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் வெற்றிபெற்றன. இதனைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் வெளியாக உள்ளது.
‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (மார்ச் 17) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர். சமீப காலமாக நடிகர் சிம்பு வெளிநாட்டில் இருந்தார். பாங்காங்கில் ஏதோ பயிற்சி வகுப்பில் பங்கேற்று வந்துள்ளார். இதனால் ‘பத்து தல’ படத்தின் சிம்புவின் டப்பிங் பணிகள் கூட அங்குதான் நடைபெற்றன.
‘பத்து தல’ படத்திற்காக நீண்ட தாடியுடன் காணப்பட்டார், சிம்பு. தற்போது தாடி இன்றி மீண்டும் இளமையுடன் காணப்படும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'கெட்டவன்' காலத்து சிம்புவை பார்ப்பது போல் உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். மீண்டும் கெட்டவன் படத்தை இயக்கும் திட்டத்தில் சிம்பு இருக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர்.