சென்னை: நடிகர்கள் சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் 'தீர்க்கதரிசி' படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்பட இயக்குநர்கள் ஹரி, ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, நடிகர் நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில் பேசிய நடிகர் நாசர், சத்யராஜ் பற்றி பேச வேண்டும் என்றால் 3 மணி நேரம் வேண்டும் என பெருமையாக கூறினார். இதனையடுத்து பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, உறவும் நட்பும் இருக்கும் வரை திரைப்படத் துறை நன்றாக இருக்கும் என்றார். மேலும் தீரன் படம் பார்க்கும்போது என்ன தோன்றியதோ, அந்த எண்ணம் இந்த படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதும் தோன்றியது என படக்குழுவினருக்கு உத்வேகத்தை அளித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ஒற்றுமை இல்லாத சந்தர்ப்பத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்ததை பார்க்கும்போது வியப்பாக உள்ளது என தயாரிப்பாளருக்கு நன்றி கூறினார். அதேநேரம் மொத்தமாக 30 நாட்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 300 நாட்கள் வரை ஓடக்கூடிய சக்தி வாய்ந்தது என பெருமைபட பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய தீர்க்கதரிசி என்றும், அதனால்தான் எம்ஜிஆர் முதலமைச்சரானார் என்றும் கூறினார். இதனையடுத்து இயக்குநர் ஹரி, தனது சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசினார்.