சென்னை:தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் எந்தக் காரணத்திற்காக ஓடும் என்று யாராலும் சொல்ல முடியாது. அந்தப் படத்தை ஓட வைத்த கொண்டாட வைத்த ரசிகர்களுக்கும் கூட அந்தக் காரணம் தெரியாது. ஒரு சில படங்கள் தான் காலம் கடந்தும் ரசிக்கப்படுபவை. அப்படிப்பட்ட படம் தான் சூர்யவம்சம். இந்தப் படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 26 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இப்போதும் சமூகவலைதள மீம்ஸ்களில் வலம் வருகின்றன.
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் இப்படத்தில் கலக்கியிருந்தார். தேவயானி, ராதிகா, மணிவண்ணன் என பலரும் பட்டையைக் கிளப்பிய படம். இப்போது டிவியில் இப்படம் போட்டாலும் குடும்பங்கள் டிவி முன் ஆஜராகிவிடுவர். இதுதான் உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைக் கொண்டாடிய படம். இப்படத்தின் இயக்குநர் விக்ரமனே இந்தப் படம் ஏன் ஹிட்டானது என்றும்; தெரியாமல் ஓடியது என்றும் சொல்லியிருந்தார். மேலும் இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படம் இப்போது உள்ள 2k கிட்ஸ்கள் பார்த்தாலும் சலிப்பு ஏற்படாத படமாக இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. அப்பா - மகன், தாத்தா - பேரன் பாசம், காதல் என ஆல் ஏரியாவிலும் கில்லியாக இருக்கும். இப்படத்தில் தேவயானி, சரத்குமார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் காட்சி இப்போதும் சமூக வலைதளங்களில் மீம் கன்டென்டாக உலா வருகின்றன. ’இவரு பெரிய சூர்ய வம்சம் தேவயானி தெரியாம ஆசிர்வாதம் வாங்குறாராமா’,அதே போல் இட்லி உப்புமாவை இல்லத்தரசிகளுக்கு அறிமுகப் படுத்தி கணவன்மார்களின் பாவத்தை வாங்கிக் கொண்டார் இயக்குநர் என்பது போன்ற மீம்ஸ்களும் இன்று வரை பிரபலமானவை.
'பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்ஸ்' ஆகச் சிறந்த மீம்ஸ் வசனமாக மாறியது. ஒரே பாடலில் பணக்காரன் ஆவது எல்லாம் அப்போது சிலிர்க்க வைத்தது. இப்போதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்தால் சூர்ய வம்சம் படத்தின் வசனங்கள் தான் அதிகம் இருக்கும். அந்த அளவுக்கு இன்றைய தலைமுறையினர் மனதில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது தெரியும்.
“படிச்ச நான் எங்க, படிக்காத நீ எங்க, காலம் எந்தளவு வேகமா சுழலுது பாத்தீங்களா”,”உளி விழும் போது வலினு அழுத எந்த கல்லும் சிலை ஆக முடியாது, ஏர் உழும் போது கஷ்டம்னு நெனச்ச எந்த நிலமும் விளைந்து நிற்காது. அதுபோல அப்பா கோவப்படுறத திட்றத தப்புன்னு நினைக்குற எந்த புள்ளையும் முன்னுக்கு வர முடியாது”என்ற கிளாஸிக் வசனமும் ஒவ்வொரு தந்தையர் தினத்தன்றும் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைரல் ஆகும்.