சென்னை:கேஜிஎஃப் பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சலார்'. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ் தவிர்த்து ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.22ஆம் தேதி திரையரங்குகளில் 'பான் இந்தியா' முறையில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.178.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘சலார்’ பெற்றுள்ளது. மேலும், இப்படம் வெளியான இரண்டாவது நாளில் ரூ.297.7 கோடியை வசூல் செய்தது. மூன்றாம் நாளில் மொத்தம் இந்தியாவில் மட்டும் ரூ.62.05 கோடியை வசூலித்துள்ளது. திங்கட்கிழமையன்று இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ரூ.41.24 கோடியை வசூலித்துள்ளது.
முதல் நான்கு நாட்களைக் காட்டிலும், 5 ஆம் நாள் வசூல் குறைந்தாலும் மற்ற படங்களை ஒப்பிடும்போது, மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது. 5வது நாளில் பிரபாஸின் இந்தியா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ரூ.25.13 கோடி வசூலித்துள்ளதாக sacnilk.com தெரிவித்துள்ளது.